ஊரடங்கு என்ற பொது முடக்கத்தால் உருக்குலைந்துபோன ஏழைகள், கூலி தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. இன்று இந்திய நாடு முழுமையாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி, சங்க தலைவர் சின்னசாமி தலைமையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
அவர்களின் கோரிக்கைகள் வருமாறு:,
1.அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டி அதன்மூலம் வாழ்க்கை நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், உணவுப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!
2)பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்!
3)கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, உணவுப்பொருட்களை விரைவில் வழங்கிடவும்,
4)நலவாரிய அட்டையை புதுப்பிக்கவில்லை என்று காரணம் கூறி பதிவு செய்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்களுக்கு நிதி வழங்க மறுக்காதீர் எனவும்,
5)ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியும் உணவுப்பொருட்களும் உடனே வழங்கிடுக எனவும்,
6) நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை நடத்தி, நிவாரணநிதியும் உணவுப்பொருட்களும் சரியாகச் சென்று சேர்வதற்கான வழிவகைகளைத் தீர்மானித்து செயல்படுத்த வேண்டும்.
7) மத்திய மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி, நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்கச் செய்திடுக,
8) வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.
9) பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற, நிலுவை தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை கைவிட வேண்டும்.
10) புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் திரும்ப, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை, கட்டணம் வசூலிக்காமல் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும்,
11) கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, உயிரை பணயம் வைத்து பணி புரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் எனவும்,
12) அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கிட கோரியும்,
13) நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கு! அந்த ஊதியத்தையும் குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்து, இந்த பணியாளர்களுக்கு அரசு மரியாதை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
14) ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்கு 'தொழிலாளர்' தகுதி வழங்கி, குறைந்தபட்சம் மாதம்18,000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
என இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சத்தியமங்கலம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் என இந்தியா முழுக்க ஏஐடியுசி தொழிற்சங்கத்தில் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.