சாலையில் நடந்து செல்லும் போது கூட பின்னால் வருபவர்கள், எதிரே நடப்பவர்களிடம் கொஞ்சம் கவனமாகத் தான் இருக்க வேண்டியுள்ளது. சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவனை பழி தீர்க்க முக அடையாளம் ஒன்றாக இருப்பதாக கருதி அப்பாவி ஒருவர் இப்போது கத்திகுத்து வாங்கி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ளார்.
இந்த பரிதாப சம்பவத்தின் விபரம் இதுதான்:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பழங்குடிப் பகுதியை சேர்ந்தவர் இயேசு ராஜ். லாரி டிரைவர். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இயேசுராஜ் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு நேற்று இரவு திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் ஈரோடுக்கு வந்தார். இன்று காலை ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலம் ஈரோடு பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையத்திற்குள் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் திடீரென இயேசு ராஜை சுற்றி வளைத்து கத்தியால் குத்தினார். இதில் இயேசு ராஜிக்கு முகம் கையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினார்கள்.
சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இயேசு ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த அனுமன் பள்ளியைச் சேர்ந்த குழந்தைசாமி என்பதும் சமையல் தொழிலாளி என தெரியவந்தது.
"தனக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் இன்று காலை நான் ஈரோடு பஸ் நிலையம் வந்தபோது என்னிடம் தகராறு செய்யும் நபர் தான் வந்துவிட்டார். என்னை அவன் அடிக்கும் முன்பே அவனை அடித்து குத்த வேண்டும் என முன்னெச்சரிக்கையாக நான் வைத்திருந்த கத்தியால் குத்தினேன். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது நான் குத்த வேண்டிய ஆள் இவர் இல்லை என்று. இருவரும் பார்க்க ஒரே தோற்றத்தில் முக அமைப்பு ஒன்றாக இருந்ததால் ஆள்மாறாட்டம் நடந்துவிட்டது." என கூற இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடலில் பல இடங்களில் கத்திகுத்து வாங்கி காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அப்பாவி யேசுராஜ். ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை சாமியை சிறையில் அடைத்தனர்.