சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் சார்பில் ‘நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆனையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பரத நாட்டிய கலைஞர்கள், பறையிசை கலைஞர்கள், சிலம்பம் மற்றும் சுருள்வாள் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பேசுகையில், “நான் பெண்ணாக பிறந்ததற்கு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். நாட்டுக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உள்ளாட்சி தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு கொடுத்து முதல்வர் காட்டியுள்ளார். ஆண்களை தாழ்த்தி பேசுவதோ, பெண்களை தூக்கி பேசுவதோ சமத்துவம் கிடையாது. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன்” என்றார்.
முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஔவையார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.