பள்ளிக்கூட அனுபவத்தை மாணவியர்களிடம் சொல்லி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரதான கல்வி நிறுவனமான வெள்ளாளர் மகளிர் கல்லூரியின் ஐம்பதாண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று அக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களால் நடத்தப்படும் இந்த கல்லூரி ஈரோடு பகுதியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்விழா நிகழ்வை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி, "நான் பவானியில் உள்ள அரசுப் பள்ளியிலும், அடுத்து நம்ம வாசவி கல்லூரியிலும்தான் படித்தேன். எங்க ஊர் காவேரி ஆற்றங்கரையின் மறுபகுதியான அதாவது அக்கறையில் இருக்கிற சிலுவம்பாளையம் ஆத்துல தண்ணி கொஞ்சமா போனா நடந்தே ஆத்தை கடந்து வந்து பவானி பள்ளிக்கூடத்துக்கு வருவோம். ஆத்துல தண்ணி அதிகமா போனா பரிசல்ல வந்து பள்ளிக்கூடம் போவோம். அது அந்த காலம் இப்ப பாருங்க ஆற்றில் பாலம் இருக்குது. ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் வருது, பள்ளி, கல்லூரிகள் ஏராளமா வந்திருச்சு.
இணையதளம் உட்பட படிப்பதற்கு வாய்ப்பு ஏராளமா இருக்குது. அதே சமயத்துல இந்த இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் அப்'னு சமூக வலைதளங்களின் தாக்கமும் உங்க கிட்டே பெருகிடுச்சு. பெண் குழந்தைகள் இந்த காலத்துல மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டும்தான் உன்னதமான வாழ்க்கையை அடையமுடியும். மாணவிகள், பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கை வேண்டும். இந்த இளம் வயதில் மனது அலைபாயும். இப்போதுதான் மிக கவனமாக இருந்து நன்கு படித்து முன்னேறி உங்க குடும்பத்துக்கு, உங்க அப்பா, அம்மாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இப்போதெல்லாம் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கின்றனர், தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்வியில் அதிக அக்கரையுடன் விளங்குகின்றனர். எனவே நல்ல சிந்தனையை உருவாக்கிக் கொள்ளுங்கள்." என்றார்.