இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் தேவிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி இந்து பிரமுகர் முருகன், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், இந்து முன்னணி மாநில செயலாளர் முனியசாமி ஆகியோர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றபட்ட பிறகு இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் கீழக்கரை பகுதியில் அதிகாலை 3 மணிமுதல் விசாரணை செய்து வந்தனர்.
இதுபற்றி நாம் கேட்டபோது, அதிகாரி திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடைபெறுகிறது என மலுப்பலான பதில் கூறினார். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் அவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.
மற்றொரு அதிகாரியிடம் ரகசியமாக கேட்டபோது அவர் வீரமரணம் என்ற வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதுபோல் சங்கேத வார்த்தைகளை உருவாக்கி பேசி வருவதாகவும், இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையில் லேப்டாப், பென்டிரைவ், மொபைல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.