அதிமுகவில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெறும் களேபரங்கள் இதற்கு முன் நடைபெறாத ஒன்று. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அணி பிளவுகள் தற்போது நடைபெறும் சம்பவங்களைப் போல் அல்லாமல் எந்த அணி உண்மையான அதிமுக என்ற சண்டையாக இருந்தது. அதில் ஜெயலலிதா வெற்றிபெற்றார். ஆனால் தற்போது பொதுக்குழு கூட்டப்படுகிறது, ஆனால் ஒருங்கிணைப்பாளருக்கு மைக் துண்டிக்கப்படுகிறது, தண்ணீர் பாட்டில் அவர் மீது வீசப்படுகிறது. யாரும் அவரின் பெயரை மறந்தும் சொல்லவில்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் ஒரே இயக்கத்தில் ஒற்றுமையாக இருப்பதைப் போலவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களாகக் கடிதம் வாயிலாகப் பேசிக்கொள்கிற நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்க இந்த இரட்டை தலைமையின் கையொப்பம் மிக முக்கியம். ஆனால் கடந்த 27ம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் கையொப்பமிட்டு யாருக்கும் ஏ மற்றும் பி பார்ம் வழங்கவில்லை. இதனால் இந்த முறை அதிமுக வேட்பாளர் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு மிகக் குறைவு. இதற்கிடையே நேற்று இதுதொடர்பாக ஈபிஎஸ் தரப்புக்குக் கடிதம் எழுதிய ஓபிஎஸ், உள்ளாட்சித் தேர்தல் படிவத்தினை அனுப்பினால் கையெழுத்திடத் தயார் எனக் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்குப் பதில் கடிதம் எழுதிய இபிஎஸ், "அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு என ஆரம்பித்து, 27ம் தேதியே நிறைவடைந்த வேட்புமனு தாக்கலுக்கு 29ம் தேதி கடிதம் அனுப்புகிறீர்கள். நீங்கள் ஒருங்கிணைப்பாளரே கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பொதுக்குழு அதற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் அந்த பதவி காலாவதியாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இருந்தும் கடிதத்தில் எப்போதும் போலவே "அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதும்.." என்ற வரிகளைப் பார்த்த நெட்டிசன்கள் குணா கமல் புகைப்படத்தை இணைத்து கிண்டலடித்து வருகின்றனர்.