தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போகிற இடங்களில் எல்லாம் ஆளும் கட்சியை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன்தினம், ”நாங்கள் நினைத்தால் தமிழக சட்டப்பேரவையை முடக்க செய்வோம்” என்றார். இதையும் தாண்டி, ”2024ம் ஆண்டு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும், அதிமுக ஆட்சி அதிகாரத்தில் அமரும்” என்றும் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர் திமுக அரசை வழக்கம்போல் கடுமையாக விமர்சனம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர், " திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு ஏதாவது திட்டம் கொண்டு வரப்பட்டதா? திமுக எப்போதும் கோவை மாவட்டத்தை புறக்கணிக்கும். இந்த முறையும் அவர்கள் அதை தொடர்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் மாயாஜாலம் செய்து வெற்றிபெற்று விடலாம் என்று அவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களால் ஒருபோதும் கோவையில் வெற்றிபெற முடியாது. தாங்கள் பெரிய வல்லவர்கள் என்று போகிற இடங்களில் எல்லாம் பேசிவரும் அவர்கள், தில்லு திராணி இருந்தால் நேரடியாக போட்டி போட வேண்டியதுதானே? பல்வேறு கட்சிகளுடன் எதற்காக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். நாம் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்திய காரணத்தால்தான் அவர்களும் வெற்றிபெற முடிந்தது. ஆனால் திமுக நம்மை போல் நாகரிகமாக இருக்காது. ஆனாலும் மக்கள் நமக்கு அதிகபட்ச வெற்றியை வழங்குவார்கள்" என்றார்.