சென்னை எண்ணூர்- காட்டுக்குப்பம் மீனவ கிராமத்தின் சார்பாக, கிராம நிர்வாகிகள் பலர் தி.மு.க.வின் மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழியைச் சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவரித்துள்ளனர்.
குறிப்பாக, எண்ணூர் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சாம்பலும், மணலும் எண்ணூர் துறைமுக கழிமுகத்தில் கொட்டப்படுகிறது. இதனால் நீர் நிலைகளில் ஏற்படும் மாசு, மக்களின் வாழ்வாதார பாதிப்பு மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றைப் பற்றி கனிமொழியிடம் விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எண்ணூர் பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்த போராட்டங்கள், கோரிக்கைகள் எதையும் முந்தைய அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. எண்ணூர் பகுதியைப் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களின் வாழ்வாதாரத்தை, ஆற்றை, அலையாற்றி காடுகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.