ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 தமிழர்கள் விடுதலை ஆளுநரிடம் பரிசீலனையில் உள்ளதால் அவர்தான் முடிவெடுக்க வேண்டும் தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய ஏதுவாக 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முடிவை எதிர்த்து ராஜீவுடன் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்கள் குற்றவாளிகளை விடுவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவு மேலும் இந்த முடிவு இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்றும், குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பதென்பதும் குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகார வரம்பிற்கே உள்ளது என்றும் அதே ஆண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி நீதிமன்றத்தின் பணி இருக்காது. இதில் தமிழக ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 28 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், முதல்வர் தனிப்பட்ட முறையில் ஆளுநரை அணுகி 7 பேர் விடுதலைக்கு ஆவண செய்யவேண்டும் என ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.