Skip to main content

அச்சத்தில் பணியாளர்கள்! அலட்சியத்தில் பல்கலைக்கழகம்! 

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Tamil Nadu M.G.R. Medical University


தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பணியாளர்கள் 700 பேர் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா பரிசோதனைகளுக்காக வரும் மக்களிடம் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கிறது தமிழக சுகாதாரத்துறை. ஆம்புலன்ஸ்களில் அந்த ரத்தமாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்து போகின்றன. பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் நான்காம் தளத்தில் உள்ள லேப்புகளில் இந்த ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலனஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிற ரத்தமாதிரிகளை, பல்கலைக்கழகத்தில் இரு தளங்களில் இருக்கும் பரிசோதனைக் கூடங்களுக்கு (லேப்) எடுத்துச் செல்ல தனி வழி ஏற்படுத்தி தரப்படவில்லை. 


பணியாளர்கள் பயன்படுத்தும் லிப்ட்டுகளையே இதற்கும் பயன்படுத்துகின்றனர். மேலும் முதல் தளத்திலும் நான்காம் தளத்திலும் உள்ள லேப்புகளுக்கு இடையே பல்கலைக்கழக நிர்வாக அறைகள் நிறைய இருக்கின்றன. இவைகளை கடந்துதான் கரோனா ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ரத்தமாதிரிகளை எடுத்துச் செல்ல தனி வழி ஏற்படுத்தவில்லை பல்கலைக்கழக நிர்வாகம். இதனால், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 700 ஊழியர்களும் அச்சத்துடனேயே பணிபுரிய வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். 

இதற்கிடையே,  பரிசோதனைக் கூடங்களில் பணிபுரியும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பயண்படுத்தும் மாஸ்க், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்திய பிறகு அலட்சியமாக குப்பைக்கூடைகளில் வீசப்பட்டு வந்தது. அதனை நாய்கள் கடித்து குதறி வந்தன. மருத்துவ கழிவுகளை கடித்து குதறியதில் சமீபத்தில் பத்து நாய்கள் இறந்துள்ளன. அதன்பிறகே, சுதாரித்துக்கொண்டு, மருத்துவ கழிவுகளை எடுத்துச் செல்ல தனியார் நிறுவனத்தை நியமித்தது பல்கலைக்கழக நிர்வாகம். தற்போது தினமும் மருத்துவ கழிவுகளை சேகரித்து எடுத்து செல்லும் தனிநபர்கள், முறையாக  பேக்கிங் செய்து, கழிவுகள் சிந்தாமல் சிதறாமல் எடுத்துச் செல்வதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், கழிவுகள் எடுத்துச் செல்லப்படும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் சிந்துகின்றன. அதனை மீண்டும் அள்ளிய பிறகு அந்த இடங்களை பினாயில் போட்டு சுத்தம் செய்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். இருப்பினும், தொற்று நம்மை தாக்குமோ என்கிற பயத்தில் பணியாளர்கள் இருக்கின்றனர். 

 

 


மேலும், 50 சதவீத பணியாளர்களை பயண்படுத்தவும், சிப்ட் முறையில் கடைபிடிக்கவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், அதனை பின்பற்றாமல், பல்கலைக்கழகத்தில் உள்ள 700 பணியாளர்களும் தினமும் வந்து போக வேண்டும்; வேலையே இல்லை என்றாலும் சும்மா உட்கார்ந்துவிட்டு செல்வதற்காகவாவது அலுவலகம் வர வேண்டும் என வலியுறுத்துகிறாராம் பல்கலைக்கழக பதிவாளர் அஷ்வந் நாராயணன். இதனால், தினமும் 700 பணியாளர்களும் அலுவலகம் வந்து செல்கின்றனர். 


பொது போக்குவரத்து இல்லாததால் வெகு தூரத்தில் இருந்து வரும் பணியாளர்கள் ஆட்டோவில்தான் வந்துபோக வேண்டியதிருக்கிறது. இதற்காக தினமும் 1000 ரூபாய் ஆட்டோவிற்கே தேவைப்படுகிறது என்றும் புலம்புகின்றனர் பணியாளர்கள். இதற்கெல்லாம் காரணம், பதிவாளர் அஷ்வந் நாராயணன், உதவி பதிவாளர் வெங்கடேஷ், பர்சனல் கிளர்க் விஜயக்குமார் ஆகியோர்தான் என்று சொல்கின்றனர் ஊழியர்கள். 

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தை கரோனா சிகிச்சை வார்டாக மாற்ற அரசு முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு அலட்சியங்களால் ஏற்கனவே பயத்திலிருக்கும் பணியாளர்கள், கரோனா சிகிச்சை வார்டுகள் இங்கு உருவாக்கப்படவிருப்பதால் மேலும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்