மோகனூர் அருகே வாய்க்காலில் சடலமாகக் கைப்பற்றப்பட்ட நபர், திருச்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி என்பதும், அவரை போலி சாமியார் தம்பியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருந்து திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் உள்ள சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள வாய்க்காலில், கடந்த செப். 10- ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
மோகனூர் காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தின் முகம், தலையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, சடலத்தை வாய்க்காலில் வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது.
எனினும், கொலையுண்ட நபர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியாததால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
தீவிர விசாரணையில், கொலையான நபர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகை நல்லூரைச் சேர்ந்த சின்னையன் மகன் மணிவண்ணன் (வயது 44) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவருக்கு திருச்செல்வி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி பத்து ஆண்டுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மணிவண்ணன் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
கொலையான நபர் யாரென்று தெரிய வந்ததை அடுத்து, மோகனூர் காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் காவல்துறையினர் விசாரணையை மேலும் வேகப்படுத்தினர்.
இதற்கிடையே மணிவண்ணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அருள்வாக்கு சொல்லும் வாலிபர் ஒருவருக்கும் தகராறு இருந்து வந்தது குறித்து தகவல் கிடைத்தது. சந்தேகத்தின்பேரில், அருள் வாக்கு சொல்லி வரும் தொட்டியம் அருகே உள்ள தொட்டியப்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சீனிவாசன் என்பவரை பிடித்து வந்து விசாரித்தனர்.
இவர் அருள்வாக்கு சொல்வதுடன், மாந்திரீகமும் செய்து வந்துள்ளார். சீனிவாசனும், அவருடைய தம்பியும் சேர்ந்துதான் மணிவண்ணனை கழுத்து அறுத்துக் கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான சீனிவாசன் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலம்:
மணிவண்ணன் தன் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்கும்படி என்னிடம் குறி கேட்க வந்தார். மாந்திரீகத்தின் மூலம் மனைவியை சேர்த்துக் வைக்கச் சொன்னார். இதற்காக அவர் என்னைப் பார்க்க வந்தபோதெல்லம் சிறுக சிறுக காணிக்கையாக சில ஆயிரங்களைக் கொடுத்துள்ளார்.
ஆனாலும் அவருடைய மனைவியை சேர்ப்பது கால தாமதம் ஆனது. இதனால் கோபம் அடைந்த அவர் ஒருமுறை என் வீட்டிற்கு வந்து, ஆபாசமாகப் பேசியதுடன், நான் பூஜையில் வைத்திருந்த கடவுள் படங்களையும் எட்டி உதைத்து நாசப்படுத்திவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், என்னுடைய தம்பி சரத்குமாரை (வயது 30) அழைத்துக்கொண்டு நாகைநல்லூர் ஏரிக்கரையில் வைத்து அவரைச் சந்தித்தேன். அப்போது அவரை உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கினோம். மயங்கிக் கீழே விழுந்த மணிவண்ணனை கழுத்தை கத்தியார் அறுத்து கொலை செய்தோம். சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, மோகனூருக்கு வந்து அங்குள்ள ஒரு வாய்க்காலில் வீசிவிட்டுச் சென்று விட்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நாமக்கல் ஜேஎம்.2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கூலித்தொழிலாளி கொலை வழக்கில் ஒரு மாதமாக நீடித்து வந்த மர்மம் விலகியது.