இந்தியாவின் எப்போதும் பதட்டமாக இருக்கும் பகுதியாக இருக்கும் காஷ்மீரில் கலவரம் எப்போது வருமோ என்கிற பதட்ட சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியர்களின் அட்டூழியங்கள் என சிவப்பு வண்ணத்தில் Atrocities in Indian occupied kashmir என வெள்ளை எழுத்துக்களால் அச்சிடப்பட்டு பாகிஸ்தான் தபால் தலையினை 13 ஜூலை 2018ல் 20 தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.
ஒரு வரிசைக்கு 5 தபால் தலைகள் வீதம் 4 வரிசையில் 20 தபால் தலைகள் கொண்ட நினைவார்த்த தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு தபால் தலையும் உள்ளுர் மதிப்பில் ரூ 8 மதிப்புடையதாகும். 20 தபால் தலைகள் $6.99 சுமார் ரூ 500 மதிப்பாகும். தபால் தலை இடதுபுறம் ஒவ்வொரு தபால் தலையிலும் ஒவ்வொரு தலைப்பு இடம் பெற்றுள்ளது.
ரசாயண ஆயுதங்களை பயன்படுத்துதல், விதவைகள், குழந்தைகள் துஷ்பிரயோகம், போலி என்கவுண்டர், சுதந்திரத்திற்கான பிரார்த்தனை, துளைக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்துதல், பெண்களை துன்புறுத்துதல், காணாமல் போனவர்கள், வெகுஜனத்தின் கல்லறைகள், ஒரு லட்சம் காஷ்மீரிகளின் உயிர் தியாகம், பர்கான் வானி 1994 - 2016 சுதந்திர சின்னம்,காஷ்மீரில் ரத்தம் வடிதல், கொலையாளிகளிடம் இருந்து பாதுகாத்தல், பின்னல் வெட்டுதல், வீடற்ற குழந்தைகள், சுதந்திர போராட்டம், மிருகத்தனம், பெண்களை சித்ரவதை செய்தல் என ஆங்கிலத்தில் மஞ்சள் வண்ணத்தில் எழுத்தும் தலைப்பிற்கேற்ற புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
தபால் தலைகள் இடது மேற்புறம் பாகிஸ்தான் எனவும் Rs 8 எனவும் அச்சிடப்பட்டுள்ளது. நேஷனல் செக்யூரிட்டி பிரிண்டிங் கம்பெனி என தபால் தாள் கீழே அச்சிடப்பட்டுள்ளது. இத் தபால் தலை இ-பே மற்றும் பிற வர்த்தக வலைதள நிறுவனத்தில் விற்கப்படுகிறது.
ஒரு நாட்டின் அஞ்சல் தலையானது அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல், கண்டுபிடிப்பு என அமையும். ஆனால், இத் தபால் தலை அண்டை நாடான இந்தியாவின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இத் தபால் தலையின் உண்மைதன்மையினை ஆராய்ந்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தபால் தலையினை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 150 இடங்களில் இலவசமாக மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடத்தி காந்திய சிந்தனைகளை எடுத்துரைத்து வரும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் மற்றும் சித்ரா விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளனர்.