சட்டமன்றத் தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்போகும் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விருத்தாசலத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பயன்பாட்டிற்காக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தித் மற்றும் சந்திராபூர் மாவட்டத்தில் இருந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூலமாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் வந்தடைந்தன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக PANEL UNIT 3549, CONTROL UNIT 270, VV PAT 1630 இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், லாரியில் இருந்த இயந்திரங்களைப் பார்வையிட்டு, பின்னர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மின்னணு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க சி.சி.டி.வி கேமரா உதவியுடன் காவல்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், கடலூர் மாவட்டத்திற்குத் தேவையாக உள்ள மீதமுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இன்னும் ஓரிரு நாட்களில் முழுவதுமாக வந்தடையும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட இயந்திரங்களை, ஸ்கேன் செய்து EMS portal -ல் பதிவேற்றம் செய்யும் பணி ஆரம்பித்து, முடியும்வரை அனைத்துத் தேசிய மற்றும் மாநில அரசு கட்சிப் பிரமுகர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.