வீடு உள்ளிட்ட அனைத்து வகையிலான பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு. இதற்கு அனைத்து தரப்பினரும், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் மற்றும் பெற்றோர் நலவழிசங்க தலைவர் வை.பாலா புதுச்சேரி முதலமைச்சர், மின் துறை அமைச்சர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர்க்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “புதுச்சேரி மின் துறையில் வரும் ஜுலை 01-ஆம் தேதி முதல் வீடு, வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது. கடந்த ஜனவரி மாதம் 07 -ஆம் தேதி மின் நுகர்வோர் ஆலோசனை கூட்டம் (JERC) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அரசியல்கட்சிகளின் தலைவர்கள், சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகள், என்.ஜி.ஓக்கள் கலந்துகொண்டு ‘மின் கட்டணத்தை வரும் நிதியாண்டில் (2020-21) உயர்த்தக் கூடாது’ என வலியுறுத்தினர். அதை ஏற்ற புதுச்சேரி அரசும், ஒழுங்குமுறை ஆணையமும் ‘தற்போது மின் கட்டணத்தை உயர்ந்த மாட்டோம்’ என உத்திரவாதம் அளித்தனர்.
தற்போது, மத்திய அரசு புதிய மின் கொள்கையை மாற்றி அமைத்து அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை, தனியார் மயமாக்கி, அறிவித்துள்ளது. கோவிட்19 வைரல் பாதிப்பு மற்றும் அதற்கான ஊரடங்கால் அனைத்து பிரிவு மக்களுக்கும் பாதிக்கப்பட்ட நிலையில் மின் கட்டண உயர்வு ஏற்கத்தக்கத்தல்ல. ஏற்கனவே ஒவ்வொரு குடும்பமும் வருவாய் இன்றி பல்வேறு நிதிச்சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த் கூடுதல் மின் கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மின் துறை பழைய கட்டணத்தையே நடைமுறை படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே புதுச்சேரி முதல்வர், ‘மத்திய மின் பகிர்வு கழகத்தின் மின் கொள்கையை ஏற்க மாட்டோம்’ என அறிவித்திருந்தார். ஆனால் மின் துறை நிர்வாகமோ, மாநில அரசாங்கத்தை மதிக்காமல் கட்டண உயர்வை அறிவித்திருப்பது கண்டிக்கதக்கது. எனவே, ஏற்றிய மின்கட்டணத்தை, உடனடியாக குறைத்து பழைய கட்டணத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.