சிட்லப்பாக்கத்தில் தெரு நாய்க்கு உணவு கொடுக்க வந்தவர் மீது சேதம் அடைந்த மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கிவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையகம் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது. இவர் திங்கள்கிழமை இரவு தெரு நாய்க்கு உணவு அளிக்க வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அவர் வசிக்கும் தெருவில் ஏற்கனவே சேதமடைந்திருந்த சிமெண்ட் மின்கம்பம் திடீரென அவர் மீது விழுந்துள்ளது. மின்கம்பம் விழுந்ததால் அதில் இருந்த கம்பிகளும் அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் சேது மீது மின்சாரம் தாக்கியதில் பதறியபடி உரத்த குரலில் சத்தம் போட்டுள்ளார் சேது. சேதுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சேதுவின் நிலைமை கலவைக்கிடமாக இருந்ததால் மருத்துவர் அவரை பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மனைவியிடம் கூறிய நிலையில் சேதுவின் மனைவி சங்கரி 108 ஐ தொடர்பு கொண்டுள்ளார்.
108 சேவை எண்ணில் பேசிய சேவை மைய பெண் ஊழியர் தனியார் மருத்துவமனையிலிருந்து 108 மூலம் அழைத்து செல்ல முடியாது ப்ரைவேட்டிலெல்லாம் வண்டிவராது நீங்க ஓனாதான் பாத்துக்கணும் எனக்கூறினார். இதனால் மனமுடைந்த சங்கரி உயிர்காக்கும் கருவிகள் இல்லாத கிடைத்த வாகனத்தில் சேதுவை ஏற்றிக்கொண்டு மற்றொரு தனியார் பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேது உயிரிழந்தார். அழைத்த நேரம் 108 வந்திருந்தால் ஒருவேளை என் கணவரை காப்பாற்றியிருக்கலாம் என கதறிய அவர் உறவினர் துணையுடன் சிட்லபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தின் முன் சேதுவின் உடலுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் சங்கரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் தரமுடியாது எனக்கூறிய அந்த சேவைமைய ஊழியரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக 108 சேவை மாநில தலைமை செயலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
சேவை மைய ஊழியர் நடைமுறையை சரியாக பின்பற்றியிருந்தாலும் உதவிகோரியவரை அவர் கையாண்ட விதம் தவறு என செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
சிட்லப்பாக்கத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்று பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுவன் தினா கிழே கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்திருந்தது. சென்னையில் அதற்கு அடுத்த இரண்டாவது நாளிலேயே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.