
மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் “மத்திய அரசு மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். அனைத்து துறைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் மின்சார துறையை மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் தனியார் மயமாக்கி நாட்டின் ஆதாரத்தை சீர் குலைக்க முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
உத்திரபிரதேசத்தில் மின் விநியோகம் தனியார்மயமாவதை எதிர்த்து போராடிய மின் வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், மின்துறை தனியார் மயனானால் இலவச மின்சாரம் இரத்தாகும், மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.