கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அடித்தட்டு ஏழை மக்கள், நடுத்தர மக்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வாழ்வாதாரம் இழுந்து தவித்து வருகின்றனர். தமிழக மின்சாரவாரிய துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் வீடுகள், தொழில் நிறுவனங்களில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான அளவீட்டைக் கணக்கெடுக்கவில்லை. அதனால் முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்தைச் செலுத்துமாறு கூறியிருந்தது. அதனை ஏற்று மக்களும் கட்டியிருந்தனர், சிறு குறு தொழில் செய்பவர்கள் கடன் வாங்கி மின் இணைப்புக்கான கட்டணத்தைக் கட்டினர்.
இந்நிலையில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மின்வாரிய கணக்கீட்டாளர்கள் வீடுகள், கடைகளில் கணக்கெடுப்புக்கு வருகின்றனர். மின்சாரம் பயன்படுத்தியது தொடர்பாக மின்பயன்பாடு கணக்கிட்டுச் சென்றவர்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை கணக்கிட்டு, இவ்வளவு தொகை கட்ட வேண்டும் எனத் தகவல் அனுப்பியுள்ளனர்.
இது பொதுமக்கள், வியாபாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 100 யூனிட்டுக்குள் இருந்தால் மின் கட்டணம் கிடையாது, 100 யூனிட்டை தாண்டினால் மின்கட்டணம் செலுத்த வேண்டும். 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201 ஆவது யூனிட் என்றால் அதற்கு வேறு கட்டணம். இப்படிக் கட்டண வேறுபாடு உள்ளது.
தற்போது மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதம் பொருத்து வந்து மின் கணக்கீடு நடைபெறுவதால் பல வீடுகளில் 200 யூனிட்களை தாண்டி மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாகக் கட்டப்படும் கட்டணத்தை விட தற்போது மின்கட்டணம் உயர்ந்துள்ளது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்களும், வியாபாரிகளும்.
அதேபோல் இறுதியாகச் செலுத்திய தொகையையே மீண்டும் செலுத்துங்கள் என மின்வாரியம் அறிவித்தது. அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின்சார கட்டணத்தை ஆயிரக்கணக்கான வீட்டினரும், வியாபார கடைக்காரர்களும் செலுத்தியுள்ளனர். மின்வாரியத்தில் செலுத்தப்பட்ட பணத்திற்கான யூனிட்டை கழிக்காமல் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலான மின்சாரம் பயன்படுத்தப்பட்ட யூனிட்டுகளைக் கணக்கெடுத்து அதில் இருந்து மார்ச் மாதம் செலுத்திய மின்சாரம் கட்டனத்திற்கான யூனிட்டுகளைக் கழிக்காமல் பில் தொகை மட்டும் கழித்து கணக்கிடுவதால் வழக்கமாக செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் செலுத்திய கட்டணத்திற்கான யூனிட்டுகளை கழித்து மீதமுள்ள யூனிட்டுக்கு மட்டுமே பணம் செலுத்த அறிவிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கின்றனர். மின்வாரியமோ இதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதியாக உள்ளது.