கரோனா வைரஸ் தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து அதன் பாதிப்பை பல வடிவங்களில் ஏற்படுத்திவருகிறது. இந்தியா முழுக்க பெரும்பாலும் கரோனா தாக்கம் என்பது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கரோனா பரவல் பெருமளவு குறைந்துவிட்டது. தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளதால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட சில நாடுகளில் அதிகமுறை உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது எனவும் நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்கக் கூடிய தன்மை உடையது எனவும் நிபுணர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல மருத்து ஆய்வாளர்கள் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கையும் கொடுத்துள்ளார்கள்.
ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டு, அவரவர் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் சாலை போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்காக பண்ணாரி, ஆசனூர், காரபள்ளம் ஆகிய 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலும் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் பகுதியிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 29ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஒமிக்ரான் வைரஸ் பரவிவருவதால் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாகவும், ஆகவே 29ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைத்து வாகன ஓட்டிகள், ஊழியர்கள், அதில் பயணிப்பவர்கள் என அனைவரும் இறுதியாக 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவர்களிடம் இருந்தால் மட்டுமே கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல் அனுமதி இல்லை என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு 29 நள்ளிரவு முதல் அமலுக்குவருகிறது. இனி கர்நாடகாவுக்குச் சென்றால் கரோனா நெகடிவ் சான்றிதழோடுதான் செல்ல முடியும்.