டீ கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளி, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம், பாமணி மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. விவசாயக் கூலியான இவர், வழக்கமாக விடியற்காலையில் டீக்கடைக்கு தனது சைக்கிளில் சென்று டீ குடித்து, வீட்டிற்கு டீ வாங்கிவருவது வழக்கம். அதுபோல இன்று காலை சென்றவர், மின்சாரம் தாக்கி இறந்துகிடப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பரவலாக இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இரவு மன்னார்குடி, பாமணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு அருகில் இருந்த மின்கம்பி அறுந்திருக்கிறது. இன்று அதிகாலையில் கடைத்தெருவில் உள்ள டீ கடைக்குச் செல்வதாக மிதிவண்டியில் வெளியே வந்த சுந்தரமூர்த்தி, மின் வயர் அறுந்துகிடந்தது தெரியாமல் அதை மிதித்துவிட்டார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்குவந்த காவல்துறையினர் சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, பாமணி கிராம மக்கள் கூறுகையில், “பாமணி கிராமம் முழுவதுமே உள்ள மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் மின் வயர்கள் தொங்கிய நிலையிலுமே உள்ளன. 'கஜா' புயலின்போது பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள், இன்றுவரை மாற்றாமல் அப்படியே சரி செய்ததால் எல்லாமே தாழ்ந்து அறுந்துவிழும் நிலையிலேயே இருக்கிறது. இதுகுறித்து மின்சார ஊழியர்களிடம் பலமுறை தெரிவித்தும், அவர்கள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. பல முறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களின் அலட்சியத்தினால் ஒரு உயிர் பரிதாபமாக போய்விட்டது. இனியாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்கிறனர்.