சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மாநிலங்கள் மற்றும் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் வேலையாகும்! இந்த அழிமாட்ட வேலையில் இறங்கியிருக்கும் பாஜக மற்றும் மத்திய பாஜக மோடி அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன். இது குறித்த அவரது அறிக்கை:
’’சட்டமன்றத் தேர்தல்களையும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது பாஜக மற்றும் மத்திய பாஜக மோடி அரசு!
இதற்காக மத்திய சட்ட ஆணையத்தையும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் வளைத்து, தன்வயப்படுத்தி, ஒரு சார்பாக, அதாவது தங்களின் உள்நோக்கத்திற்கு இசைவாக பயன்படுத்துவது நடக்கிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மூன்று பக்க வரைவு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது சட்ட ஆணையம்.
பதவிக்காலம் முடிவடையும் தறுவாயில் உள்ள சட்டமன்றங்களுக்கு சேர்த்து முதல் கட்டமாகவும் எஞ்சிய சட்டமன்றங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து அடுத்த கட்டமாகவும் சேர்த்து தேர்தல் நடத்தலாம் என்கிறது தேர்தல் ஆணையம்.
சட்டத்தைக் கண்காணிப்பதுதான் சட்ட ஆணையத்தின் வேலை; தேர்தலை நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை; அப்படியிருக்க, அரசுக்கு யோசனை சொல்லவோ அல்லது ஆலோசனை கூறவோ இவற்றிற்கு அதிகாரமில்லை என்பதுதான் அரசமைப்புச் சட்டப்படியான உண்மை. பிரதமர் இவற்றை வளைத்து தன்வயப்படுத்தியிருப்பதும் உண்மை.
சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முடிவுக்கு ஏன் வருகிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
முழுக்க முழுக்க இந்த முடிவில் இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடிதான். காரணம், இனியொரு தடவை அவர் பிரதமர் ஆக முடியாது என்பது மட்டுமல்ல; அவரது பாஜகவுமே மத்தியில் இனி ஆட்சிக்கே வர முடியாது என்பதால்தான்.
அணையப்போகும் விளக்கு அதிக பிரகாசமாக கடைசி கணத்தில் எரிவது போன்றுதான் மோடி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆகாத காரியங்கள், தகாத காரியங்கள் - இதுதான் மோடி ஆட்சியின் லட்சணம்; இடைத் தேர்தல்களிலெல்லாம் பாஜாக தோல்வியை சந்திப்பதிலிருந்தே இது நிரூபணமாகிறது. அதனால்தான் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் என்கிறார். இதன் மூலம் மாநிலப் பிரச்சனைகளை மறக்கடித்து ஊடகங்கள் துணையுடன் கொயபல்ஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று பார்க்கிறார்.
சட்டமன்றம், மக்களவை இவற்றின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதை அரசமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. இந்தப் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ததும் தேர்தல் நடத்த வேண்டும்; இந்தப் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யாமல் இடையில் பதவி இழந்தாலும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தெளிவாகச் சொல்கிறது அரசமைப்புச் சட்டம்.
இதை மீறி நடப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்; அது மாநில உரிமை, ஜனநாயகம், கூட்டாட்சி முறை இவற்றை ஒழித்துக்கட்டவே வழிவகுக்கும். எனவே இந்த அழிமாட்ட வேலையில் இறங்கியிருக்கும் பாஜக மற்றும் மத்திய பாஜக மோடி அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!’’