தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உள்ளாட்சியின் முதற்கட்ட தேர்தலில் 77.43 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 1,381 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 2,901 ஊராட்சித் தலைவர்கள், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 27,003 பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது. அதேபோல் 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மாங்காட்டில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்காக உணவு, கழிவறை, குடிநீர் வசதி போன்றவை முறையாக செய்யப்படவில்லை என தேர்தல் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.