வேலூர் மாவட்டத்தில், வேலூர், அரக்கோணம் என இரண்டு நாடாளமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் அதிகளவு பணம் தொகுதியில் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. அரக்கோணம் தொகுதி தேர்தல் மட்டும் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றுள்ளார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குள், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுப்பட்ட வருவாய்த்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், தனது அலுவலகத்தில் விருந்து அளித்தார்.
இதற்காக, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், திருத்தணி வட்டாட்சியர், திருத்தணி தேர்தல் துணை வட்டாட்சியர் மற்றும் ஒரு உதவியாளர் டிரைவர் ஆகியோர்கள் வருகை தந்துள்ளனர். அரசின் மகேந்திரா ஜீப் மூலமாக வரும்போது, வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகிலுள்ள ஏரிக்கரையின் தடுப்புச்சுவரில் ஜீப் மோதியுள்ளது. இதில் மூன்று அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அலுவலக உதவியாளர்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது. வாகனம் ஓட்டிவந்த ஓட்டுநருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி சோளிங்கர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அரசு வாகனத்தின் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதை பெரிதுப்படுத்த அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
.