கடந்த 6 மாதங்களாக நடந்த திமுகவின் உட்கட்சி தேர்தல் 99 சதவீதம் நடந்து முடிந்து விட்ட நிலையில் திமுகவின் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், தலைமை செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டுமான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதிவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். அதற்கான மனுத்தாக்கலை இன்று தாக்கல் செய்தார். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனு தாக்கல் செய்தனர். நாளை மறுநாள் நடக்கக்கூடிய தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியின்றி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.