தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் இறுதி பட்டியலும் அவர்களுக்கான சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து வருகிற தேர்தலில் கரோனா நோய் தொற்று காரணத்தால் வாக்கு செலுத்தும் நேரத்தை அதிகரித்து அறிவித்துள்ளனர்.
இது குறித்து தலைமை செயலகத்தில் சத்யபிரத சாகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7 ஆயிரத்து 255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு ஆயிரத்து 727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4 ஆயிரத்து 512 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் தற்போது 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 ஆக வக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவற்றில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர். 7 அயிரத்து 192 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
கடந்த இரண்டு மாதத்தில் புதிதாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 66 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தை கண்காணித்து, முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.