தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (06/04/2021) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, "தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெறுகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கடைசி ஒருமணி நேரத்தில் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் பயன்படுத்தப்படும். 4,17,521 பணியாளர்கள் நாளை சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடுவர். தமிழகத்தில் நேற்று (04/04/2021) மாலை 03.00 மணிவரை ரூபாய் 428.46 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் அதிக தேர்தல் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன. 'சி விஜில்' (cVIGIL) செயலி மூலம் கரூர் தொகுதியில் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது பற்றி ஆணையமே முடிவெடுக்கும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்". இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.