Skip to main content

மூத்த மகள் காதல் திருமணம்; அவமானம் தங்காத பெற்றோர் இரு குழந்தைகளுடன் தற்கொலை

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
மூத்த மகள் காதல் திருமணம்; அவமானம் தங்காத பெற்றோர் இரு குழந்தைகளுடன் தற்கொலை

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் வட்டம், தாண்டானூரை சேர்ந்தவர் இராஜேந்திரன் (வயது-48). இவருடைய மனைவி பெயர் இராணி (வயது- 40), இவர்களுக்கு மோனிகா (வயது-22), ஆர்த்தி (வயது-18,) நவீன் (வயது-16) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முதல் மகள் மோனிகா சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ, படித்துள்ளார். இதே கல்லூரியில் படித்த அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள பெரிய கவுண்டாபுரம் ஏழாவது மையில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது-23) என்ற இளைஞரை காதலித்து வந்த மோனிகா, அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் கடந்த ஆடி 18- அன்று வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார்.

பின்னர் இதையறிந்த இராஜேந்திரன், பெரிய கவுண்டாபுரம் சென்று மகளை பார்த்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தன்னுடைய காதலனை விட்டுவிட்டு உங்களுடன் வர முடியாது என்று மோனிகா கூறிவிட்ட நிலையில், “என்னையும், குடும்பத்தினரையும் ஏமாற்றிவிட்டு சென்ற உன்னை சும்மா விடமாட்டேன்...” என்று மகளிடம் கூறிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்ற மோனிகா, காதல் திருமணம் செய்துகொண்டு கணவருடன் வாழும் என்னை, என்னுடைய தந்தையார் மிரட்டிவிட்டு சென்றுள்ளார். அவரால், எனக்கும், என்னுடைய கணவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. என்றும், இதனால் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காரிப்பட்டி  காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். நேற்று காலை இராஜேந்திரனை போன் மூலம் கூப்பிட்ட கருப்பட்டி போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீண்டும், நாளை காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று கூறி நேற்று மாலை இராஜேந்திரனை போலீசார் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

வீட்டுக்கு சென்ற இராஜேந்திரன், தன்னுடைய மகளால் ஏற்பட்ட அவமானத்தாலும், போலீசார் என்ன செய்வார்களோ என்ற பயத்தாலும், மனைவி இராணி, இரண்டாவது மகள் ஆர்த்தி, மகன் நவீன் என நால்வரும் “மோனோ ஸ்டார்” என்ற பருத்தி செடிக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.

இன்று காலை எட்டு மணிவரை இராஜேந்திரனின் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அவருடைய பக்கத்து வீட்டுகாரர்கள் இராஜேந்திரன் வீட்டை எட்டிப் பார்த்தபோது இராஜேந்திரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றானர்.

பெ.சிவசுப்ரமணியம்.

சார்ந்த செய்திகள்