கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நகர் சேர்ந்த மணி(58) அவரது மனைவி ராஜ்ஜியம். இவர்கள் ரயில்வே சந்திப்பிற்கு பின்புறம் உள்ள அடர்ந்த பகுதியில் தனியாக வீடு கட்டி ஆடு, மாடுகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ரயில்வே சந்திப்பில் இருந்து, வட மாநிலமான அசாமை சேர்ந்த வாலிபர் ஒருவர் காட்டு பகுதியை நோக்கி சென்றுள்ளார். காட்டு பகுதியில் இருந்த வீட்டிற்கு சென்றவன், வீட்டில் இருந்த வயதான கணவன், மனைவியை கடுமையான முறையில் ஆயுதத்தால் தாக்கியுள்ளான்.
வலியால் துடித்த அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஒடி அவனை மடக்கி பிடித்தனர். ஆனால் அவன் எல்லோரையும் தாக்கியதால், பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரையும் அவன் தாக்கவே பொதுமக்கள் உதவியுடன் அவனை கை, கால்கள் கட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கணவன் மனைவி இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்த பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வட மாநில வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், விருத்தாசலம் காவல்துறையினர் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். புது வகையான போதை பொருள் உபயோகித்திருந்ததால் வட மாநில வாலிபர் காட்டுத்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது. வட மாநில வாலிபரின் தாக்குதலால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.