கல்விக்கட்டணம் கட்ட தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுக்கக் கூடாது என்று அரசு கூறியுள்ளது. ஆனால் பல கல்லூரிகளில் இப்போது வரை மாணவர்களைத் தடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வீரகேசவன் என்பவர் புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் கேப்பரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தார். 2 பேப்பர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் அரியர் பேப்பர்களை எழுத நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற போது கல்விக்கட்டணம் பாக்கி உள்ளதால் தேர்வு எழுத அனுமதி இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் தேர்வு எழுத முடியாமல் அங்கிருந்து வெளியேறினார்.
இந்தத் தகவல் குறித்து நாம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மாணவர் வீரகேசவனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிர்வாக அலுவலர்களிடம் தேர்வு எழுதவிடாமல் திருப்பி அனுப்பியது குறித்து விசாரணை செய்த பிறகு, இன்றைய தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போதும் சிலர் தேர்வுக்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். மாணவரின் கல்விக்கட்டணம் நிலுவை இருந்தாலும் தேர்வு எழுதுவதைத் தடுக்கக் கூடாது என்றதும் தேர்வு எழுத அனுமதி அளித்தனர்.
கல்லூரி தரப்பினரோ, மாணவர் தேர்வுகளுக்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் மாணவர் வெளியே சென்றுவிட்டதால்தான் அன்றைய தேர்வை எழுத முடியாமல் போனது என்றனர்.
மாணவர் தேர்வு எழுத அனுமதி கிடைத்ததும் நம்மிடம் தகவல் கொண்டுவந்த அவரது உறவினர்கள், கோட்டாட்சியர் உள்பட நடவடிக்கை எடுக்க உதவிய அனைவரும் நன்றி கூறினார்கள்.