"வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆசிரியர் தின விழாவிற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியதாவது, "மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான். ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது.
அக்டோபர் 2021 முதல் "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை" அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கென சுமார் ரூ.163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறும் நோக்கோடு 2021-22-ஆம் ஆண்டில் "எண்ணும் எழுத்தும் இயக்கம்" தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம்.
வயதிற்குட்பட்ட இளம் 18 எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000/- ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன்முத்துக்களாக உருவாக்கும் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம்.
வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.