தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராமராஜ், சேலத்தில் வெள்ளிக்கிழமை (27.08.2021) மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச்சிறைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் கிளைச்சிறையில் உள்ள 4 கைதிகளின் குழந்தைகள் குறித்து விசாரித்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச்சிறையில் கைதிகளிடம் முதன்முதலாக குறைகள், கோரிக்கைகள் பற்றி நேரில் கேட்டறிந்தோம். கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் சார்ந்த ஏதேனும் உதவிகள் தேவைப்படுகிறதா? என்பது குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.
சில கைதிகள் தங்கள் குழந்தைளுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெற்றதில் சில குளறுபடிகள் இருந்ததாகக் கூறினர். அதன்மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
கரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதுமே குழந்தை திருமணங்கள், இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் வகையில் மாநில அரசு, மாவட்டம், கிராமம், வட்டார அளவில் 6 குழுக்களை அமைத்துள்ளது. இதை வரவேற்கிறோம்.
இந்தக் குழுக்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. தமிழக சமூகநலத்துறை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஆணையம் தயாராக இருக்கிறது.
சிறைவாசிகளின் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவிகள் வழங்கப்படும். இதையடுத்து அனைத்து மத்திய சிறைகளுக்கும் சென்று ஆய்வு நடத்தப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது குறித்து நேரில் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.