பா.ஜ.க., பா.ம.க. என கூட்டணி விஷயத்தில் திட்டம் போட்டு கனகச்சிதமாக முன்னேறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்து தே.மு.தி.க.வை வளைத்து அ.தி.மு.க. அணியில் கொண்டு வருவாரா? அல்லது தே.மு.தி.க. கூட்டணி உறவை இழப்பாரா? என்பது தான் தமிழக அரசியலின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதோடு அ.தி.மு.க. அணியில் சில சமூக கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுகளும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேற்கு மண்டலத்தில் உள்ள சமூக கட்சியான "கொ.ம.தே.க.வை அ.தி.மு.க. அணியில் சேர்த்து இரண்டு தொகுதியாவது கொடுங்களேன் மாப்ளே" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் எடப்பாடியின் உறவினரும் கொ.ம.தே.க.வுக்கு தூதுவராகவும் செயல்பட்ட வக்கீல் செங்கோட்டு வேலு என்பவர்.
"என்னது ரெண்டு தொகுதியா? என அதிர்வுடன் அவரிடம் எடப்பாடி பேச, "சரி மாப்ளே.. ஒரு தொகுதி கொடுங்க நம்ம சமூக கட்சி.... அதுக்கு கொடுக்காம இருக்கலாமா? என உறவுத் தூதுவர் மறுபடியும் பேச, ஈஸ்வரன்(கொ.ம.தே.க.பொதுச் செயலாளர்) சரியில்லே.. அவரு ஒரு சந்தர்ப்பவாதி. ஈஸ்வரன் கட்சிய கூட்டணியில சேர்த்தா மற்ற சமூக மக்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு வராது. அந்த அளவுக்கு அதிருப்தி இருக்குது. நம்ம ஊர்ல இருக்கற தொகுதிகளில் யார் வேட்பாளரா நிக்க போறாங்க. பெரும்பாலும் கவுண்டர் தானே வேட்பாளர்... அப்புறம் என்ன? ஈஸ்வரன் பேச்சு பேசாதீங்க மாமா" என பேச்சை முடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதை நம்மிடம் கூறிய அச்சமூக மூத்த நிர்வாகி ஒருவர், ஒரு பழமொழியையும் கூறி விட்டுச் சென்றார்.