நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியைத் தொடங்கி இருக்கும் நிலையில் கட்சிக்கான முதல் மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் நாள் கணக்கில் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாட்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்யின் முதல் மாநாடு வெற்றிபெற அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நடிகர் விஜய் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரும் மக்களுக்கு பொதுச்சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அவரது முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். திமுக அரசு விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்ல, அதிமுக போராட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது” என்றார்.