‘புரவி’ புயலால் கொட்டித்தீர்த்த கனமழை கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது. மழைப் பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டுவருகிறார்.
புரவி புயல் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்தது. இதனால், நாகை மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 60 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப் பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார்.
கடலூர் மாவட்டத்தைப் பார்வையிட்டுவிட்டு 8ஆம் தேதி இரவு வேளாங்கண்ணி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து இன்று (09.12.2020) காலை தனது ஆய்வைத் தொடங்கினார். அதற்கு முன்பு வேளாங்கண்ணியில், அவருக்குச் சிறப்புப் பிராத்தனை செய்தனர். பிறகு கனமழையால் சேதமடைந்த நாகூர் ஆண்டவர் தர்கா சுற்றுச்சுவரை பார்வையிட்டார். அதற்கு முன்பு நாகூர் தர்கா நிர்வாகியினர் பழனிசாமிக்கு தொப்பி அணிவித்து மரியாதை செய்து அழைத்துச் சென்றனர். அப்போது நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியும் வந்து வரவேற்பு அளித்தார்.
அங்கிருந்து புறப்பட்டவர் நாகை, திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை ஒரமாக உள்ள கருங்கண்ணி பகுதியில் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அங்கு முன்னதாகவே வேளாண்மை துறையினராலும், மருத்துவத் துறையினராலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதிப்பு புகைப்படக் காட்சிகளைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பழங்கள்ளிமேடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளையும் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அங்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளைப் பார்த்தார், அங்கிருந்த சமையலரிடம். 'என்னென்ன காய்கறி போட்டிருக்கீங்க?' என்று கேட்டபடியே காய் ஒன்றை எடுக்கச் சொல்லி, ருசித்து அருமையா இருக்கு, என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
கருங்கண்ணியில் விவசாயப் பயிர்களின் சேதத்தைப் பார்வையிட்ட பழனிசாமியிடம் அழுகிய பயிரை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார் ஒரு விவசாயி, அதனைப் பார்த்தவர், 'இது என்ன நெல் ரகம், இன்னும் எத்தனை நாள் பயிர், எவ்வளவு சேதம்?' எனக் கேட்டார். இதுதான் எங்க வாழ்வாதாரம், இதவைத்து ஒருவருடம் சாப்பிடனும், என்று கூறினார் விவசாயி.