தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கியது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம் என்றார்கள். அதில் சொல்லப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் கூட ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையிலும் கூட இதனைத் தெரிவித்தார். ஆனால், அதனை செய்யாமல், குழு ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின்படி நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றவர்கள் அதனைச் செய்யவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'நீட் தேர்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்' என சொல்லியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு பேச்சு என்பதாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.