நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மதுரை, தேனி, திண்டுக்கல் எனத் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக நேற்று கன்னியாகுமரி சென்ற கமல்ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோனை மேற்கொண்டார். பின்னர் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன்,
''பறக்கவேண்டும் என்றே ஒரு சின்னக் கொடி, அது பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி. அந்த அன்னக் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். அதைச் செய்யவேண்டும் என நினைத்தாலே எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான். அதைச் செய்து காட்டிவிட்டால் அவரது ஆசிபெற்றுவந்த அவரின் அடுத்த வாரிசு நான்தான்'' எனப் பேசினார்.
அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரை கமல்ஹாசன் சொந்தம் கொண்டாடுவது குறித்து அ.தி.மு.கவின் தற்பொழுதைய தலைவர்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து கமல்ஹாசன் அ.தி.மு.க ஆட்சியையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அரியலூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் குறித்த கேள்விக்குக் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கமல் குறித்து அவர் பேசுகையில், ''அவர் புதுசா கட்சியில் சேர்ந்திருக்கிறார். சினிமாவிலிருந்து ரிட்டையர்ட் ஆகி வந்திருக்கிறார் அவருக்கு என்ன தெரியும். 70 வயசு ஆகிறது. பிக்பாஸ் நடத்திட்டு இருக்காரு. பிக்பாஸ் நடத்துபவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும். எல்லாருக்கும் பிக்பாஸ் தெரியும். அதுல என்னங்க இருக்கு சொல்லுங்க. அதைபோய் நடத்திக்கிட்டு இருக்காரு. அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லை. நல்லா இருக்கக்கூடிய குடும்பத்தைக் கெடுப்பதுதான் வேலை. அந்த டிவி தொடரை பார்த்தால் குழந்தையும் கெட்டுப்போயிடும், நல்லா இருக்க குடும்பமும் கெட்டுப்போயிடும். ஆக்கப்பூர்வமான எத்தனையோ திட்டங்கள் இருக்கு, நதிகள் இணைப்புப் பற்றி காட்டுங்கள், விவாயிகளின் புதிய பண்ணைத் திட்டங்கள், என்னென்ன நடவு செய்கிறார்கள் அதைக் காட்டுங்கள். புதுசா என்னென்ன கண்டுபிடிப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கான நல்ல அறிவுரைகளை கொடுங்கள். எம்.ஜி.ஆர் இருக்கும்பொழுது எவ்வளவு பாட்டுகள் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என எத்தனையோ நல்ல நல்ல படங்களில் நடிச்சுக் காட்டியிருக்காரு. ஆனால் இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் பாடல் பாடியிருக்காரா? அந்தப் படத்தைப் பார்த்தா அந்தக் குடும்பம் அதோடு காலி'' என்று கமல் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்.