சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர் இணைப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் காலிங்கராயன். ஈரோடு மாவட்டத்தில் ஓடுகிற பவானி ஆற்றைத் தடுத்து சுமார் 150 கிலோ மீட்டருக்கு ஒரு வாய்க்கால் வெட்டி அதன் மூலமாக ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் செழிப்பான அளவில் விவசாயம் செய்ய முடிவு செய்து வாய்க்காலை வெட்டி அதில் பவானி ஆற்று நீரை அந்த வாய்க்காலில் திருப்பி விட்டவர்தான் காலிங்கராயன்.
பின்னாளில் அந்த வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்கால் என அழைக்கப்பட்டது. இப்படி விவசாயத்திற்காக தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தியாகம் செய்து அந்த வாய்க்காலை வெட்டி விவசாயிகளுக்கு மிகுந்த பயனை கொடுத்த காலிங்கராயன் நினைவு தினம் நேற்று தமிழக அரசு சார்பாக கொண்டாடப்பட்டது.
காலிங்கராயனுக்கு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதோடு காலிங்கராயன் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். காலிங்கராயனுக்கு மரியாதை செலுத்துவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.