தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது தனது சொந்த ஊரான சேலத்திற்கு வந்து இரண்டு மூன்று நாள்கள் ரிலாக்ஸ் செய்துவிட்டு திரும்பி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் சென்ற 20 ஆம் தேதி சேலம் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த முதல்வர், 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்று அங்கு ஓரிரு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அப்படியே தனது தோட்டம் உள்ள சிறுவம்பாளையம் கிராமத்திற்கு சென்று உற்றார் உறவினர்களை சந்தித்து அதன் பிறகு மீண்டும் சேலம் வீட்டிற்கு வந்தார்.
தொடர்ந்து 22 ஆம் தேதி சேலத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் . அதேபோல் வி ஐ பி கள், சில அமைப்பு நிர்வாகிகள் யாரெல்லாம் தன்னை சந்திக்க விரும்பினார்களோ அவர்களை எல்லாம் வீட்டுக்கு அழைத்து தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டே சந்தித்ததும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதும் நடந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி கிராமத்திற்கு செல்லும் போது அந்த வழியில் காரை நிறுத்தி அங்கு நின்ற மக்களிடம் பேசினார்.
அப்போது ஒரு மூதாட்டி ஒரு மனுவை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தார். அந்த மனு முதியோர் உதவித்தொகை மனு. அந்த பாட்டியிடம் பணிந்து குனிந்து பேசினார் முதல்வர் எடப்பாடி. அப்போது அந்த பாட்டி நம்ம ஊர் ஐயா வா நீங்க.
அந்த மவராசன் எம்ஜிஆருக்குப் பிறகு உங்கள தான் நேரில் பார்க்கிறேன் என கூற, நெகிழ்ந்து போன எடப்பாடி கொஞ்சம் திகைப்பிலும் ஆழ்ந்தார். இப்படித்தான் முதல்வர் எடப்பாடி தனது சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம் வழக்கமாக இதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் நடக்கும் படி அதிகாரிகள் கவனமாக செய்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தனது சொந்த வீட்டில் மாதத்தில் ஒரு முறையோ இரு முறையோ ரிலாக்ஸ் செய்யும்போது தனது நெருங்கிய உறவினர்களான மாமன் மச்சான் பங்காளிகளுடன் இரவில் கதை பேசுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் பிடித்துப் போய் உள்ளது. சேலம் முகாமை தொடர்ந்து 23 ஆம் தேதி அன்று செவ்வாய்க்கிழமை சேலத்தில் இருந்து கிளம்பி நேராக காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு அப்படியே அரசுப்பணியில் ஈடுபட சென்னை செல்லவிருக்கிறார்.