'புரெவி’ புயல் பாம்பனை நெருங்கிவரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மாலை 6 மணிமுதல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், கடற்கரை மற்றும் நீர் நிலைகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'புரெவி’ புயல் எதிரொலியாக நாளை ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்னும் 2 மணி நேரத்தில் புயல் கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. திருச்சி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், ஈரோடு, ராமநாதபுரம், நாகை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 'புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து சென்னை, பெங்களூரு செல்லக்கூடிய விமானங்கள் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.