கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி அனுராதா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர். காஞ்சிபுரம் நகரில் இருக்கக்கூடிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ள அசைவ கடைகளில் தயாரிக்கப்படும் ஷவர்மா தரமானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையிலிருந்த 2 கடைகளுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஐந்து கடையிலிருந்து ஷவர்மாவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.