Skip to main content

'நெல்லையில் நில அதிர்வு? கிளாவரையில் நில வெடிப்பு'-பொதுமக்கள் அச்சம்

Published on 22/09/2024 | Edited on 22/09/2024
'Earthquake in nellai? Earthquake in Clavery'-Public fear

கொடைக்கானல் கிளாவரைப் பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கொடைக்கானலின் நகர்ப் பகுதியை ஒட்டி பல்வேறு மலைக் கிராமங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலின் கடைக்கோடி கிராமமாக உள்ள கிளாவரை எனும் தமிழக கேரள எல்லையை ஒட்டிய பகுதியில் திடீரென நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்திற்கு நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது அந்தப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் கிராம மக்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆய்வாளர்கள் அங்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதுகுறித்து நாளை ஆய்வு செய்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளாவரை பகுதிக்கு செருப்பன் ஓடை பகுதியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வருவது வழக்கம். திடீரென தண்ணீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள் மலைப்பகுதி வழியாக சென்று பார்த்த பொழுது இந்த நில வெடிப்பு தெரியவந்தது. ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர் உள்ளிட்டோர் நாளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேபோல நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்களிடையே மற்றொரு அச்சம் ஏற்பட்டிருந்தது. நெல்லையில் அம்பாசமுத்திரம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் முறையாக மக்களிடம் இது தொடர்பாக விசாரிக்கவில்லை உண்மையிலேயே நில அதிர்வு பயங்கர சத்தத்துடன் ஏற்பட்டது என அம்பாசமுத்திரம் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த இரண்டு தகவல்களும் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்