மனித உயிர்களை காவு வாங்கும் கரோனாவை எதிர்த்து ஒட்டுமொத்த உலக அதிகாரமும் மருத்துவ போர் புரிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் ஊரடங்கால் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த கொடிய வைரஸை விரட்ட ஒவ்வொரு மாநில அரசுகளும் அதேபோல் ஒவ்வொரு மாவட்ட அரசு நிர்வாகமும் முழுமையாக களம் இறங்கி வேலை செய்கிறது.
இதில் குறிப்பாக ஈரோடு மாவட்ட நிர்வாகம், கூடுதல் அக்கறையுடன் இந்த கரோனா எதிர்ப்பு போரில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஈரோட்டில் கரோனா வைரஸ் பாசிடிவ் என்ற தகவல் வந்ததிலிருந்தே தொடர்ந்து உழைக்க தொடங்கிவிட்டார். பாசிடிவ் நபர்கள், அவர்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் தொடர்புகள் என எல்லா விபரங்களையும் எடுத்து சுமார் 18 பகுதிகளில் வசித்த ஒரு லட்சத்து இருபதாயிரம் பேரை தனிமைப்படுத்தி வைக்க வைத்தார்.
அதேபோல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கரோனா வைரஸால் சிகிச்சை பெறுபவர்கள் நிலையை கண்டறிய ஒவ்வொரு நாளும் அங்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோட்டிலிருந்து பவானி, பெருந்துறை, சென்னிமலை, சிவகிரி, கொடுமுடி மற்றும் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம் அடுத்து மலைப் பகுதிகளான தாளவாடி, கடம்பூர், பர்கூர் என ஒவ்வொரு நாளும் பயணம் செய்து அங்கு கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது, அவர்களை ஊக்கப்படுத்துவது என சலிப்பில்லாமல் சுற்றுகிறார்.
இன்று பவானிசாகர் பகுதி மற்றும் மலை பகுதியான ஆசனூர் வட்டத்தில் உள்ள தமிழக, கர்நாடகா மாநில எல்லையான கேர்மாளம் செக்போஸ்ட் வரை சென்று முறையாக தடுப்பு நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துள்ளார். இவரை போல் ஈரோடு மாவட்ட அதிகாரிகளும், பணியாளர்களும் அர்பணிப்போடு உழைத்ததால்தான் இங்கு வைரஸ் தொற்றிய 70 பேரில், வயதான ஒருவர் மட்டும் இறந்து, மற்ற 69 பேரில், தற்போது வரை 65 பேர் குணமாகி தங்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.
இப்போது சிகிச்சையில் உள்ள எஞ்சிய நான்கு பேரும் நலமாக இருக்கிறார்கள். இந்த நான்கு பேரும் இரண்டு நாட்களில் அவரவர் வீட்டுக்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில் புதிதாக ரத்த பரிசோதனை செய்துள்ள 210 பேருக்கு மட்டும் ரிசல்ட் வரவேண்டியுள்ளது.