ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 30ந் தேதி வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமைத் தாங்கினார். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாயப் பிரதிநிதிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள், பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் பல்வேறு மனுக்களை வழங்கினார்கள்.
அந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, “கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் தேதி நீட்டிப்பு செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். புஞ்சை பாசனத்திற்கான அடுத்த பருவத்திற்கான தண்ணீர் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் அப்போதுதான் நாங்கள் அதற்கு வேண்டிய வசதிகள் செய்ய வசதியாக இருக்கும். அறுவடை பகுதி உள்ள இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு அரசு கட்டுப்படியான உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும்.
உதாரணமாக, கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 5000, நெல் குவிண்டால் ரூபாய் 2500, மஞ்சள் குவிண்டால் ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும். பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பில் சதி இருப்பதாக சிலர் பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வக்பு வாரிய சொத்துக்கள் எனக்கூறி பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் பல இடங்களில் பத்திரப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வருவாய்த் துறை தலையிட்டு உரிய விளக்கம் தர வேண்டும். பர்கூர் வனச்சாலையில் மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படும் பகுதியில் தற்போது அதிக கனரக வாகனங்கள் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் கூடுதல் விபத்துக்கள், மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை அரசு கண்காணிக்க வேண்டும்.
வனவிலங்குகளால் பாதிக்கக்கூடிய விளைநிலங்களுக்கு அரசு காப்பீடு தருவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். கணக்கெடுப்புப் பணியில் வனத்துறையினருடன் வருவாய்த் துறை, வேளாண் துறையினரும் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் உண்மையான பாதிப்பு நிலவரம் தெரியவரும். காளிங்கராயன் வாய்க்காலை பொருத்தவரை சாயக்கழிவு நீர் தொடர்ந்து கலக்கப்படுகிறது. இதனை முறையாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேபி கால்வாயை முறையாகத் தூர்வார வேண்டும்.” இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
இதற்கு அந்தந்தத் துறைசார்ந்த அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.