Skip to main content

“என்னமா, நீங்க தாலி கட்டுறீங்க?’ - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலகல!

Published on 17/11/2024 | Edited on 17/11/2024
 Dy CM Udhayanidhi Stalin says What you should thali

சென்னை ஆர்.கே. நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், 'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் 48 இணைகளுக்கு திருமணம் இன்று (17.11.2024) நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தைத் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் மணமக்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சூர்யகுமார் - குணவதி என்ற மணமக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அச்சமயத்தில் திருமண பரபரப்பில் இருந்த மணமகளின் தாயார் துணை முதலமைச்சரிடம் இருந்து தாலி பெற்றுக்கொண்டு மணமகனுக்குப் பதில் அவரது தாயே மணமகளுக்குத் தாலி  கட்ட முயன்றார். இதனைக் கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணமகளின் தாயாரை நோக்கி, “என்னமா, நீங்க தாலி கட்டுறீங்க” எனக் கேட்டு மெய் மறந்து சிரித்தார். இதனால் அப்பகுதியில் சிறு நேரம் சிரிப்பலை எழுந்தது. இதனையடுத்து மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திருமண பதற்றத்தில் இருந்த ஒரு சில மணமகன்கள் தனக்குதானே மாலை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு முயற்சி செய்தார். இது தவறில்லை பெண்கள் தான் தாலி கட்ட வேண்டும் என்று அவசியமில்லை” என்று கலகலப்பாகப் பேசியதால் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. 

சார்ந்த செய்திகள்