சென்னையில் ஊசி சிரஞ்சி வடிவில் விற்கப்படும் சாக்லேட் தொடர்பாக சர்ச்சைகள் எழ, தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது எக்ஸ்பிரி பொருட்களை விற்பதாக கூறிய உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரியை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஊசி சிரஞ்சி வடிவில் சாக்லேட் விற்பனை தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வாயிலாக வெளியான நிலையில் அவை போதை சாக்லேட்டா? என சந்தேகங்கள் கிளம்பியது. இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அதிகாரி, 'சென்னை புளியந்தோப்பு டிசி கொடுத்த தகவலின் பேரில் நாங்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டோம். இங்கு உள்ள அனைத்து பொருட்களும் சாப்பிட உதந்தவையாக இல்லை. சிரஞ்சி வடிவிலான சாக்லெட்டை எடுத்து லேபுக்கு அனுப்பியுள்ளோம். இந்த சாக்லேட் சாப்பிட உகந்ததே கிடையாது. ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே இதில் போதை பொருள் கலந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். சம்பந்தபட்ட கடையில் ஒரு பொருளில் கூட உற்பத்தி செய்யப்பட்ட நாள் குறிப்பிடப்படவில்லை. எல்லாம் எக்ஸ்பிரி பொருட்களாக உள்ளது. இந்த சிரஞ்சி சாக்லேட் தயாரிக்க ஏற்கனவே மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட சிரஞ்சிகள் பயன்படுத்தப்பட்டதா என்பதும் ஆய்வு முடிவில் தெரியும். இது அத்தனையையும் எடுத்து டிஸ்போஸ் பண்ணப்போறோம் '' என்றார்.
அப்பொழுது அங்கிருந்த வியாபாரிகள், எக்ஸ்பிரி பொருட்களெல்லாம் இல்லை. எங்களுக்கும் பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்கிறார்கள். அது வெறும் சாக்லேட் தான் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். செய்தியாளர்கள் மத்தியில் எக்ஸ்பிரி பொருட்களை விற்கிறோம் என எப்படி சொல்லலாம் என வாதிட, அந்த அதிகாரி 'இவை எக்ஸ்பிரி பொருட்கள் இல்லை... ஆனால் உற்பத்தி செய்த தேதி இல்லை'' என்றார். அதன்பின் அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரியிடம் வியாபாரிகள் கடுமையாக பேசத் தொடங்கினர். 'டாஸ்மாக்கில் எல்லாம் மது விற்கிறார்கள் அங்கெல்லாம் விட்டுவிடுங்க' என கூச்சலிட்டபடியே அந்த சிரஞ்சில் அடைக்கப்பட்ட சாக்லெட்டை செய்தியாளர்கள் மத்தியில் சாப்பிட்டு காட்டி ஆவேசமாக கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து அவர்களது வாகனத்தில் கிளம்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது.