திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் தாலுகாவின் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உட்பட பல்வேறு மலை கிராம பகுதியில் இருந்து கிடைக்கும் மழை நீர், மலை அடிவாரத்திலுள்ள கன்னிமார் கோவில் வழியாக வந்து குடகனாறு உற்பத்தியாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டம் வரை சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது.
இப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் இந்த நீரை பயன்படுத்திவந்தன. இப்பகுதி முழுவதும் நெல், வாழை, கரும்பு, தென்னை, பூக்கள் என விவசாயம் செய்யப்பட்டு வந்தது. அதேபோல், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் காமராஜரால் 1954ஆம் ஆண்டு குடகனாறு ஆற்றுப்படுகை அருகே காமராஜர் நீர்த்தேக்கம் என்ற நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
இந்த நீர்த்தேக்கம் திண்டுக்கல் நகராட்சி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக தற்போதுவரை விளங்குகிறது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக குடகனாறு ஆற்றுப்படுகையில் தண்ணீர் வரவில்லை. இதற்கு முக்கிய காரணமாக ஓடை அருகே ராஜ வாய்க்கால் என்ற பகுதியில் கான்கிரீட் சுவர் எழுப்பி தண்ணீருடன் ஆற்றுப்படுகையில் வரவிடாமல் மாற்றுப்பாதையில் விட்டதால்தான்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக குடகனாறு ஆற்றுப்படுகையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டங்களை குடகனாறு மீட்பு குழு, பொதுமக்கள், விவசாயிகளை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
ராஜவாய்க்கால் வழியேச் சென்ற நீர், மாவட்ட நிர்வாகத்தால் கடந்த மாதம் திறக்கப்பட்டு, அனுமந்தராயன் கோட்டை, வக்கம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக தாடிக்கொம்பு வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி நீர்த்தேக்கம் வரை சென்றது. இந்நிலையில், மீண்டும் குடகனாறு ஆற்றில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் குடகனாறு மீட்புக்குழு, தண்ணீரை தொடர்ந்து திறந்துவிட வேண்டும்.
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன கிராமங்களும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் இந்நீரைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, மீண்டும் எந்த ஒரு தங்குத் தடங்கலும் இல்லாமல் பொதுமக்கள், விவசாயிகள் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தண்ணீரை திறந்துவிட வேண்டும். ராஜ வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர், சுமார் 16 கிராமங்கள் விவசாயிகள் பயன்படுத்திய பின்பு, வைகை ஆற்றில் போய் சேருகிறது. குடகனாற்றிலிருந்து, 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
ஆகவே, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தண்ணீரை தொடர்ந்து திறந்து விடக்கோரியும் கூம்பூர் அழகாபுரி குடகனாறு அணையில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காமராஜர் நீர்த்தேக்கம் வரை பேரணியாக சென்று திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.