விழுப்புரம் கணபதி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் விழுப்புரம் நேரு வீதியில் பெரிய அளவில் சைக்கிள் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், மாலை 3 மணி அளவில் விற்பனையை முடித்துக்கொண்டு கடையை மூடிவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
நேற்று காலை 9 மணி அளவில் சிவசங்கர் கடையைத் திறந்தபோது கடையின் உள் சுவற்றில், ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்குத் துளையிடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவசங்கர், கடையில் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தார்.
அதில் ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அந்தப் பணத்தை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிவசங்கர் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் கொள்ளைநடந்த கடையை நேரில் சென்று பார்வையிட்டனர்.
சுவரை துளையிட்டு கொள்ளை அடித்தவர்கள் கடை முழுவதும் மிளகாய்ப் பொடியை தூவி விட்டுச் சென்றுள்ளனர். கடை ஊழியர்களிடம் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காண அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வுசெய்து வருகின்றனர். விழுப்புரம் புதுச்சேரி சாலை, நேரு வீதி வழியே தான் செல்கிறது 24 மணி நேரமும் பரபரப்பாக வாகனங்களும் மனிதர்களும் செல்லும் இந்த சாலையில் உள்ள ஒரு கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நகரிலுள்ள வியாபாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.