சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய அரசர் முத்தையாவேள் ஆய்வரங்கம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார். தமிழியல் துறைத் தலைவர் அரங்க பாரி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராகப் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு பேசுகையில், “இந்தக் கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு நான் பயிலும்போது கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திற்கே ஒரே ஒரு கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழகம் தான். ஆனால் தற்போது ஊருக்கு ஒரு கல்லூரி வந்துவிட்டது. இந்தக் கல்லூரியில் அப்போது ஆண்கள் 100 பேர் கல்வி பயின்றால் பெண்கள் 10 பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் தற்போது ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகக் கல்வி கற்கிறார்கள் எனவே இதுதான் திராவிட மாடல்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியார் மற்றும் முத்தையா செட்டியார் தமிழை வளர்க்க அரும்பாடு பட்டு வளர்த்துள்ளனர். கல்வி பாட புத்தகங்களை தமிழில் மாற்றியவர் அண்ணா. அதன் பிறகு தமிழைப் படித்தால் ஊக்கத்தொகை ரூ.500 வழங்கியவர் கலைஞர். தமிழக முதல்வர் ஸ்டாலின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கல்லூரி மற்றும் விடுதி கட்டணம் இல்லை என்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கி வருகிறார். இதனால் இந்த ஆண்டு 29 சதவீதம் பெண்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர்” என்றார்.
வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றான்டு விழா தொடங்குகிறது. இதனையொட்டி பல்கலைக்கழகத்தில் கலைஞர் இருக்கை அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் பேசுவதற்கு முன் பல்கலைக்கழக மாணவ மாணவிகளைப் பேசக் கூறினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த ஆண்டேரிதனிஷ்கா, மாணவர்கள் மாதேஸ்வரன், ராஜதுரை பேசினார்கள். இதனை அமைச்சர் கூர்ந்து கவனித்து மாணவர்களைப் பாராட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சான்றுகளை வழங்கினார்.