Skip to main content

திராவிடர் திருநாள் - 15, 16ல் பறையாட்டம் - ஒயிலாட்டம் - உரியாட்டம்

Published on 13/01/2018 | Edited on 14/01/2018
திராவிடர் திருநாள் - 15, 16ல் 
 பறையாட்டம் - ஒயிலாட்டம் - உரியாட்டம் 

பொங்கல் திருநாள் விழா குறித்து திராவிடர்  கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழா _ தமிழ்ப் புத்தாண்டு _ பொங்கல் விழா 2018 ஜனவரி 15, 16 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் பறையாட்டம், ஒயிலாட்டம், கழியாட்டம் உள்ளிட்ட பல்வேறு மகிழ்ச்சி பொங்கும் விழா நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ‘பெரியார் விருது - 2018’ சாதனையாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.



தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 24 ஆம் ஆண்டு விழாவாகவும், பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஆகியவை இணைந்து இத்திராவிடர் திருநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

‘தமிழ்இசை வரலாறு தொல்தமிழர் இசைக் கருவிகள்’ ஒளிப்படக் கண்காட்சி. இரண்டு நாட்களும் மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெறும் இவ்விழாவில், ‘தமிழ்இசை வரலாறு தொல்தமிழர் இசைக் கருவிகள்’ ஒளிப்படக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது.

அலங்காநல்லூர் இரா.வேலு ஆசானின் சமர்கலைக் குழு வழங்கும் பறையிசை, கரகாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், ஒயிலாட்டம், கழியாட்டம், மக்களிசைப் பாடல்கள் ஆகியவை இடம்பெறும். மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்லைக்கழக பேராசிரியர் நல்லசிவம் குழுவினர் வழங்கும் பண்ணிசை, நாட்டுப்புற இசைக் கலைஞர் அறிவுமானன் குழுவினரின் நாட்டுப்புற இசைப் பாடல்கள், சிலம்பாட்டம், உரியாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் ஆகியவையும் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளன.

இவ்விழாக்களில், 15ஆம் தேதி கவிக்கோ அப்துல்ரகுமான், பேராசிரியர் பு.இராசதுரை படங்களையும், 16ஆம் தேதி தமிழறிஞர் மணவை முஸ்தபா, இயக்குநர்-நடிகர் மணிவண்ணன் ஆகியோரின்  படங்களையும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  திறந்து வைக்கிறார்.

'பெரியார் விருது - 2018'

2018 ஆம் ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ பெறவுள்ள

 இயக்குநர் - நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், 
‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி, 
மாரத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன், 
திரைப்பட இயக்குநர் கோபி நயினார், 
இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன்,
‘இன்னிசை ஏந்தல்’ திருபுவனம் ஆத்மநாதன், 
கவிஞர் செவ்வியன், 
பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், 
ஓவியர் ஹாசிப்கான், 
கவிஞர் சல்மா, 
ஓவியர் அபராஜிதன் 

ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாராட்டுரை வழங்குகிறார்

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர். 

விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.’’

சார்ந்த செய்திகள்