தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பும் நடிகர் ரஜினிகாந்த் மீதான புகாரில் வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றிய பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்பும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.