மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி. இவர், அப்பகுதியில் மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் வேலை செய்துவருகிறார். இவரது மகள் விஜயலட்சுமி, மருத்துவப் படிப்பு முடித்து தற்போது மருத்துவராகியுள்ளார். குடும்ப வறுமையையும் சமாளித்து மகளை மருத்துவம் படிக்கவைத்த ரமணி குறித்தும், குடும்ப வறுமையில் கடுமையாக படித்து மருத்துவராகியுள்ள விஜயலட்சுமி குறித்தும் செய்திகள் வெளியாகின.
இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவர் விஜயலட்சுமிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்களின் உயர் கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச் சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று திருக்கடையூர் பகுதியில் ரமணி மற்றும் மருத்துவர் விஜயலட்சுமி ஆகியோர் நேரில் சந்திது வாழ்த்து பெற்றனர். இந்தச் சந்திப்பின் போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உடன் இருந்தார்.